மருங்காபுரியில் விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் வட்டாட்சியர் கைது!

 
bribe

திருச்சி மாவட்டம் மருங்காபுரியில் விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே உள்ள மஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன். இவரது விவசாய நிலத்தின் வழியாக செல்லும் மின்சார கம்பியை, அவரது நிலத்தை ஒட்டி உள்ள மரத்தின் கிளை உரசியதால், கடந்த மாதம் 25ஆம் தேதி சுப்பிரமணியன் மரக் கிளைகளை வெட்டியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மருங்காபுரி வட்டாட்சியர் லட்சுமி, சுப்பிரமணியனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

bribe

அப்போது, அனுமதியின்றி அரசுக்கு சொந்தமான மரக்கிளையை வெட்டியதால் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதனை தவிர்க்க வேண்டுமெனில் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். பின்னர், ரூ.10 ஆயிரம் பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.  லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சுப்பிரமணியன், இதுகுறித்து திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.

பின்னர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் ஆலோசனையின் பேரில் சுப்பிரமணியன் ரசாயனம் தடவிய ரூ. 10 ஆயிரம் பணத்தை நேற்று மாலை அலுவலகத்தில் வைத்து வட்டாட்சியர் லட்சுமியிடம் வழங்கினார். அப்போது, அங்கு மறைந்து இருந்த டிஎஸ்பி  மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர், வட்டாட்சியர் லட்சுமியை கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.