திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு துவங்கி வைத்தார்!

 
trichy

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். 

திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகை பயன்பாட்டு மையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் கடந்த 3 மாதங்களாக துவங்கி நடைபெற்று வந்தது. இந்த பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனைய கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, பஞ்சப்பூரில் ஓருங்கிணைந்த பேருந்து முனையம் மொத்த மதிப்பீடு 349.98 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளதாகவும், அடுத்த ஒரே ஆண்டில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தார். திருச்சி அண்ணாசாலை முதல் ஜங்ஷன் வரையிலான உயர் மட்ட பாலம் அமைக்க ரூ.966 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு உள்ளதாகவும், டெண்டர் விடும் பணிகள் இனி நடைபெற்று உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்கும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார். மேலும், மழையின் காரணமாக நகர் பகுதிகளில் சாலை அமைக்கும் திட்டத்தில் தாமதம் ஏற்படுவது உண்மை தான் என்றும் அவர் தெரிவித்தார்.

knnehru

மழைக்காலங்களில் திமுகவின் சாயம் வெளுக்கிறது என்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றாட்டுக்கு பதில் அளித்து பேசிய அவர், திமுகவின் சாயம் ஒருபோதும் வெளுக்காது என்றும், சாயம் போகாத கட்சி திமுக என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார். ஓராண்டில் எவ்வளவு கோடி ஒதுக்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என்பதை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், எம்எல்ஏ-க்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, அப்துல் சமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.