பெருந்துறையில் அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் பணம், நகை கொள்ளை... மர்மநபர்கள் கைவரிசை!

 
robbery

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை மற்றும் 60 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள ஜயப்பன் கோவில் சத்தி நகரை சேர்ந்தவர் சுப்புரத்தினம் (50). இவர் பெருந்துறை சிப்காட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா. இவர் பெருந்துறை அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சுப்புரத்தினம் - உமா தம்பதியினர் சென்னையில் உள்ள மகள் சிந்துவின் வீட்டிற்கு சென்றிருந்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் இருவரும் வீட்டிற்கு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்துகிடந்துள்ளது.

perundurai

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 60 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் 6 பவுன் நகைகள், வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சுப்புரெத்தினம் அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகை பதிவுகளை சேகரித்தனர்.

மேலும், அந்த பகுதியில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.  அதில், இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை அடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.