சிவகாசி அருகே தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை... குடும்ப தகராறில் சோகம்!
சிவகாசி அருகே குடும்ப தகராறில் தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் வனிதா ராணி (35). இவரது கணவர் வேலுச்சாமி. இவர்களுக்கு லோகேஷ் (15), காவிய பிரியா (12) என 2 பிள்ளைகள் உள்ளனர். லோகேஷ் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பும், காவிய பிரியா, 7ஆம் வகுப்பும் படித்து வந்தனர். கருத்து வேறுபாடு கணவன் - மனைவி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிள்ளைகள் இருவரும் வனிதாவுடன் வசித்து வந்த நிலையில், வனிதா அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பணிபுரிந்து குழந்தைகளை பராமரித்து வந்தார். வேலுச்சாமி அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற லோகேஷ், தன்னை பாலிடெக்னிக் கல்லுரியில் சேர்க்கும்படி தாய் வனிதா ராணியுடம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் பணம் இல்லாததால் பாலிடெக்னிக்கில் சேர்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, லோகேஷ், இதுகுறித்து தந்தை வேலுச்சாமியிடம் செல்போனில் தெரிவித்துள்ளார். அதன்பேரில், வேலுச்சாமி விஸ்வநத்தம் பகுதிக்கு வந்து லேகேஷை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.குடும்பத்தை கவனிக்காமல் தங்களை விட்டுச் சென்ற கணவர் தற்போது மகனையும் உடன் அழைத்துச்சென்றதாக கூறி மனவேதனையடைந்த வனிதா ராணி வேதனையுடன் இருந்துள்ளார்.
மேலும், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தனது மகள் காவிய பிரியாவுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


