"கட்சிக்காக உழைத்த மகளிருக்கு சீட் வழங்கவில்லை"... அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட திமுக மகளிர் அணி நிர்வாகிகள்

 
cbe protest

கட்சிக்காக உழைத்த மகளிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து, கோவையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை, திமுக மகளிர் அணி நிர்வாகிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, கோவை மாநகராட்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இடையே வார்டு ஒதுக்கீடு செய்வதில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. சில இடங்களில் கூட்டணி கட்சியினருக்கு வார்டு ஒதுக்கீடு செய்ததை கண்டித்து திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திமுக மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து, நேற்றிரவு கோவை அவினாசி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டை முற்றுகையிட்டு மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

senthil balaji

ஆப்பாட்டத்தின் போது, திமுகவில் 50 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், திமுகவின் மகளிர் அணி சார்பில் உழைத்தவர்களுக்கு யாருக்கும் சீட் ஒதுக்கவில்லை என்றும், கட்சிக்கு எந்த விதத்திலும் அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் கணவருக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி, மனைவி மற்றும் மகள்ளுக்கு சீட் வழங்கப்பட்டு உள்ளது, மிகுந்த வேதனை அளிக்கிறது எனவும், இது முறையல்ல என தெரிவித்தனர்.

மேலும், கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்தது அமைச்சர் செந்தில் பாலாஜி என்பதால், அவரது வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாகவும் மகளிரணி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டை மகளிர் அணியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.