திருப்பூரில் மூதாட்டியை கழுத்தறுத்து கொன்று நகை கொள்ளை... சிசிடிவி காட்சி அடிப்படையில் கொலையாளிக்கு போலீஸ் வலை!

 
murder murder

திருப்பூரில் மூதாட்டியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு 5 பவுன் செயினை திருடிச்சென்ற நபரை போலீசார் சிசிடிவி காட்சி அடிப்படையில் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் அடுத்த எஸ்.வி காலனி மெயின் ரோடு, டி.எஸ்.ஆர். லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி சந்திராமணி (67). இவர்களுக்கு பூவேந்தன் என்ற மகன் உள்ளார். கெமிக்கல் கம்பெனி நடத்தி வரும் இவர், குடும்பத்துடன் கே.பி.என். காலனியில் வசித்து வருகிறார். இதனால் முத்துச்சாமி - சந்திராமணி தம்பதியினர் தனியாக வசித்து வந்தனர்.  இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்த சந்திராமணி வீட்டின் கேட்டை திறந்துவிட்டு, கணவருக்கு சமையல் செய்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் அவர் சமையல் அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த முத்துசாமி சென்று பார்த்துள்ளார்.

tirupur Gh

அப்போது சந்திராமணி  கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துச்சாமி, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன், துணை ஆணையர் வனிதா மற்றும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, போலீசார் வீட்டில் பொருத்தி இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்தபோது, கைலி, சட்டை அணிந்த 50 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுவதும், சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த நபர் வெளியே வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. போலீசாரின் விசாரணையில் மர்மநபர் சந்திராமணியின் கழுத்தை அறுத்து, அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றது தெரியவந்தது.
 இதனை அடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சந்திராமணியை கொலை செய்துவிட்டு நகையை திருடிச் சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.