தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் 1,400 போலீசார்!

 
vilupuram sp

விழுப்புரம் மாவட்டத்தில் தீபவாளி பண்டிகையை ஒட்டி 1,400  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பபட்டு உள்ளதாக, எஸ்பி ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள், பாதுகாப்பாவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுவதற்கு, மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி பட்டாசுகளை காலை 6 - 7 மணி வரையிலும், மாலை 7 - 8 மணி வரையிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெடிக்கவும், பேரியம் உப்பு பயன்படுத்திய மற்றும் அனுமதிக்கப்பட்டதை மீறி ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளையும் வெடிக்கக்கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி மற்றும் கோட்டக்குப்பம் நகரங்களில் பொதுமக்களின் கூட்ட நெரிசலில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிப்பதற்கு 12 இடங்களில் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போதிய குற்ற தடுப்புக்காவலர்களை நியமித்தும், முக்கிய இடங்களில் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

vilupuram

மாவட்டத்தில் சமூக விரோத  செயல்பாடுகளை கட்டுப்படுத்த 17 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்வதை தடுக்கவும் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 17 நான்கு சக்கர வாகன ரோந்து மற்றும் 25 இருசக்கர வாகன ரோந்துகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளையும் 103 துணை பகுதிகளாக பரித்து போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் வாகனங்களால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்கள், 10 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு விபத்து ஏற்படாமல் கண்காணிக்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 1,400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், என எஸ் ஸ்ரீநாதா தெரிவித்துள்ளார்