பணகுடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி ஒருவர் பலி... இறந்தவரின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்ற சபாநாயகர் அப்பாவு!

 
appavu

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு, சபாநாயகர் அப்பாவு நேரில்  சந்தித்து ஆறுதல் கூறினார். 

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அனுமன் நதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பணகுடி அருகே அனுமன் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தாம்போதி தரைப்பாலத்தை வெள்ளநீர் மூழ்கடித்த படி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில், பணகுடி அருகே உள்ள கொமந்தான் கிராமத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் தரை பாலத்தை கடக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வள்ளியூர் தீயணைப்புத்துறையினர், அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

appavu

இந்த நிலையில், நேற்று இசக்கிமுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த ராதாபுரம் தொகுதி எம்எல்ஏவும், தமிழக சட்டமன்ற சபாநாயகருமான அப்பாவு, இசக்கி முத்துவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவரது குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய சபாநாயகர் அப்பாவு, இசக்கிமுத்துவின் 2 குழந்தைகளின் படிப்பிற்கான அனைத்து செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார். அத்துடன், இந்த விவகாரம் குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நிவாரண உதவி பெற்றுத்தருவதாகவும் உறுதி அளித்தார்.