"ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற வேண்டும்; குழப்பம் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை" - ராமநாதபுரம் ஆட்சியர்

 
ramnad collector

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் தேசிய கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மத்திய, மாநில அரசு உத்தரவுகளின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வரும் 13 முதல் 15ஆம் தேதி வரை தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் தேசிய கொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிகளில் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் உதவி இயக்குனர் ஊராட்சிகள் அவர்களை 7402608158 மற்றும் 04567 -299871 என்ற எண்ணிலும் புகார்  தெரிவிக்கலாம்.

தேசிய கொடியை அவமதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.