தீபாவளி போனஸ் தராத உரிமையாளர்... கடையின் முன் குப்பைகளை கொட்டிய மாநகராட்சி ஊழியர்!

 
cbe

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீபாவளி போனஸ் தராததால் தனியார் கடையின் முன்பாக மாநகராட்சி ஊழியர் குப்பைகளை கொட்டிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஆர்.எஸ்.புரம் ராமச்சந்திரா ரோட்டில் ஜேம்ஸ் என்பவர் எல்.இ.டி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஜேம்சிடம் மாநகராட்சி சுகாதார பணியாளர் ஒருவர், தீபாவளி போனஸ் கேட்டுள்ளார். அப்போது 20ஆம் தேதிக்கு மேல் பணம் தருவதாக ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். எனினும் அதனை கேட்காமல் அந்த தொழிலாளி, தனக்கு ரூ.500 தரும்படி கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி சுகாதார பணியாளர் ஒருவர் ஜேம்ஸ் கடையின் அருகில் கிடந்த குப்பைகளை அள்ளி, அவரது கடையின் வாயிலில் கொட்டிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

cbe

இதனிடையே கோவை மாநகராட்சி பகுதிகளில் சில இடங்களில் பணம் கொடுக்காத கடைகள் மற்றும் வீடுகளின் முன்பாக சிலர் குப்பைகளை கொட்டிச் செல்வதாக வியாபாரிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டி உள்ளனர். ஒரு சில சுகாதார பணியாளர்களின் இத்தகைய நடவடிக்கையால் அனைவருக்கும் அவப்பெயர் ஏற்படுவதாகவும், எனவே தவறு செய்தவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.