ஆட்சியர் முன்னிலையில் அரசுப்பள்ளியில் தேசிய கொடி ஏற்றிய ஊராட்சி மன்ற தலைவர்!

 
pudukkottai

புதுகோட்டை அருகே அரசுப்பள்ளியில் தேசிய கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டதாக வேதனை தெரிவித்த பட்டியல் இன ஊராட்சி மன்ற தலைவர், நேற்று ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில் தேசிய கொடியை ஏற்றினார் 

நாட்டின் 75-வது சுதந்திர தினம் கடந்த 15ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அன்றைய தினம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றினர். மேலும், ஊராட்சி மன்ற தலைவர்களை தேசிய கொடியை ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சேந்தாக்குடி ஊராட்சி மன்ற தலைவராக பட்டியலினத்தை சேர்ந்த தமிழரசன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர், கடந்த சில ஆண்டுகளாக சுதந்திர தினத்தன்று அரசுப்பள்ளியில் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்து இருந்தார். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

collector kavidha

இதனை அறிந்த, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசன், அரசுப் பள்ளியில் தேசிய கொடி ஏற்ற நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, நேற்று கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆட்சியர் கவிதா ராமு முன்னிலையில், சேந்தாக்குடி ஊராட்சி தலைவர் தமிழரசன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரின் வேதனையை அறிந்து அவரை தேசிய கொடி ஏற்ற நடவடிக்கை எடுத்த ஆட்சியரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.