ஒப்பந்ததாரரிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளர் கைது!

 
manapparai

மணப்பாறை அருகே ஒப்பந்ததாரரிடம் ரூ.6 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் பகுதியை சேர்ந்தவர் முகமது இஸ்மாயில். ஓப்பந்ததாரரான இவருக்கு, புத்தாநத்தம் ஊராட்சியில் பைப் லைன் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்த பணிகளுக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.4 லட்சம் பணம் கொடுக்க வேண்டி உள்ளது. இதனை வழங்கக் கோரி, முகமது இஸ்மாயில் புத்தாநத்தம் ஊராட்சி செயலாளரான வெங்கட்ராமனை அணுகி உள்ளார்.

bribe

அப்போது, பணத்தை விடுவிக்க தனக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தர கேட்டுள்ளார். இதில் விருப்பமில்லாததால் முகமது இஸ்மாயில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அங்கு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரம் பணத்தை நேற்று மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து,  ஊராட்சி செயலாளர் வெங்கட்ராமனிடம் வழங்கினார்.

அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக வெங்கட்ராமனை கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்த லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.