பவானி அருகே வீட்டில் பதுக்கிய 1,125 கிலோ ரேஷன்அரிசி பறிமுதல்... தப்பியோடிய இளைஞருக்கு போலீஸ் வலை!

 
arrest

பவானி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,125 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், இது தொடர்பாக ஒருவரை தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செங்காடு பகுதியில் உள்ள வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஆய்வாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார், செங்காடு பகுதியில் உள்ள வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள வீட்டின் முன்பு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளை சோதனையிட்டபோது, அதில் 1,125 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. 

ration rice

இதையடுத்து குடிமைப்பொருள் வழங்கு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், அந்த ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செங்கோடு பகுதியை சேர்ந்த கார்த்தி (35) என்பவர் ரேஷன்அரிசி பதுக்கி வைத்து, வட மாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு போலீசார் கார்த்தி மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.