"தனியார் இ-சேவை மையங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து"... அரியலூர் ஆட்சியர் எச்சரிக்கை!

 
collector ariyalur collector ariyalur

அரியலூர் மாவட்டத்தில் அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் இ-சேவை மையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பல தனியார் கணினி மையங்களில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இ-சேவை Citizen Login-ல் 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்கள் மற்றும் 6 வகையான முதியோர் உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விண்ணப்பிக்கும் சான்றிதழ்களில் எழுத்துப்பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல், இடைத்தரகர்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல புகார்கள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அரசு பொது இ-சேவை மையங்களில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சேவை கட்டணங்கள் : வருவாய்த்துறை சான்றிதழ்களுக்கு விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.60/-,  ஓய்வூதிய திட்டம் தொடர்பான விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.10/-, திருமண நிதியுதவி திட்டங்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.120/-, இணையவழி பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.60/- வீதம் கட்டணம் பெறப்படுகிறது.

e- sevai

இ-சேவை மையம் நடத்துவதற்கான அரசு உரிமம் பெற்றுள்ள தனியார் கணினி மையங்களில் மேலே குறிப்பிட்ட சேவைக்கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்து தெரியவந்தால் , அம்மையத்தின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். அரசு உரிமம் பெற்ற மையங்களை தவிர, பிற தனியார் கணினி மையங்களில் சான்றுகள் சம்பந்தமான விளம்பர பலகைகள் வைத்தால் அபராதம் மற்றும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென எச்சரிக்கப்படுகிறது.

பொதுமக்கள் இடைத்தரகர்களை தவிர்த்து அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைந்துள்ள அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும்  பொது இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க வங்கிகளில் அமைந்துள்ள பொது இ-சேவை மையங்கள், கிராமப்புறங்களில் மகளிர் திட்ட அலுவலகத்தின் கீழ் கிராம வறுமை ஒழிப்பு கட்டிங்களில் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்கள் மற்றும் அரசு உரிமம் பெற்ற தனியார் கணினி மையங்களை அணுகலாம்.

மேலும், சான்றிதழ்கள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக வசூல் செய்வது தொடர்பான புகார்களை tnsevaihelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.