வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில் எஸ்பி தலைமையில் மதுவிலக்கு வேட்டை... 14 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் அழிப்பு!

 
illicit arrack

வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில், எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்ற மதுவிலக்கு வேட்டையில் 14 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.  

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலை, அல்லேரி மலை, பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்கும் பொருட்டு நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் தலைமையில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பயிற்சி உதவி ஆய்வாளர்கள் கொண்ட 13 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டது.

vellore

இதில் மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட சுமார் 14 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், 21 சாராய அடுப்புகள், 150 லிட்டர் சாராயம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, தரையில் கொட்டி அழிக்கப்பட்து. மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 24 நபர்கள் மீது மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மேலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவதை கைவிட்டு மனம் திருந்தி வாழ நினைப்பவர்களுக்கு, தமிழக அரசால் மறுவாழ்வுக்காக வழங்கப்படும் நிதி பெற்றுத்தரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.