புதுக்குடி தான்தோன்றீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா... ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

 
pudukudi

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த புதுக்குடி ஸ்ரீசௌந்தர நாயகி சமேத தான்தோன்றீஸ்வரர்  சுவாமி  கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள 51 புதுக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசௌந்தர நாயகி சமேத தான்தோன்றீஸ்வரர்  சுவாமி  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி கும்பாபிஷேக விழா மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

pudukudi

தொடர்ந்து, யாக சாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்று புனிதநீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கோவில் ராஜகோபுரத்துக்கு ஊற்றப்பட்டது.

ddd

அதனை தொடர்ந்து, தான்தோன்றீஸ்வரர் கோவில், அஷ்டபுஜ காலபைரவர் கோவில் மற்றும் ஸ்ரீபிரம்ம சண்டேஸ்வரர் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.