ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!
ராசிபுரம் ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறப்பு எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதன்படி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
இதனையொட்டி, ஸ்ரீபொன் வரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில், முத்தங்கி கவச அலங்காரத்தில் பல்லக்கில் பரமபத வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டபடி பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர். சொர்க்க வாசல் திறப்பையொட்டி, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து, ஸ்ரீ பொன் வரதராஜ பெருமாளுக்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.