நெல்லையில் போலி ஆவணம் மூலம் வேறொருவருக்கு மாற்றப்பட்ட ரூ.36 லட்சம் நிலம் மீட்பு!

 
nellai

நெல்லையில் போலி ஆவணம் மூலம் வேறொரு நபருக்கு மாற்றப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான நிலத்தை நில அபகரிப்பு பிரிவு போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

நெல்லை பாளையங்கோட்டை கே.சி.நகர் பிருந்தாவன் நகரை சேர்ந்த ஜுடி என்பவருக்கு சொந்தமாக, பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் 24 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் போலி ஆவணம் மூலம் வேறொருவருக்கு விற்பனை செய்துள்ளனர். இதனை அறிந்த  ஜுடி, மாவட்ட எஸ்பி சரவணனிடன் மனு அளித்தார்.  இது தொடர்பாக எஸ்.பி சரவணன் உத்தரவின் பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த நிலம் போலி ஆவணம் மூலம் வேறு நபருக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் இணைந்து நடத்தி வரும் நில அபகரிப்பு தொடர்பான முகாமில், நில உரிமையாளர் ஜுடி மற்றும் எதிர் மனுதாரர்கள் ஆகியோர் முகாமிற்கு அழைக்கப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவின் பேரில், மனு மீது துணை ஆட்சியர் தமிழரசி, வட்டாட்சியர் பகவதி பெருமாள் மற்றும் துணை வட்டாட்சியர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, துணை ஆட்சியரின் சீரிய முயற்சியால் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை  எடுக்கப்பட்டு, மேற்படி ஆவணம் போலி ஆவணம் என உறுதி செய்யப்பட்டது.  மேலும், பாளையங்கோட்டை மாவட்ட பதிவாளர் பிறப்பித்த மோசடி பதிவு என வழங்கிய செயல்முறை ஆணையை, திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சரவணன் நிலத்தின் உரிமையாளரான ஜுடி என்பவருக்கு வழங்கினார். 

nellai

இதே போல்,  திருநெல்வேலி மாவட்டம் தளபதிசமுத்திரம் வேப்பங்குளத்தை சேர்ந்த சுப்பையா என்பவரது ரூ.1 லட்சம் மதிப்பிலான 32 சென்ட் நிலம் போலி ஆவணம் மூலம் வேறோருவர் பெயருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து சுப்பையா, நெல்லை மாவட்ட எஸ்பி சரவணனிடம் மனு அளித்தார். அவரது உத்தரவின் பேரில், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு நிலத்தை மீட்டனர். தொடர்ந்து, நேற்று அதற்கான ஆவணத்தை எஸ்.பி. சரவணன், நில உரிமையாளர் சுப்பையாவிடம் வழங்கினார். இரு வழக்குகளிலும் சிறப்பாக செயல்பட்டு நிலத்தினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு  பிரிவு போலீசாருக்கு, மாவட்ட எஸ்பி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.