ஆம்பூரில் வட்டார போக்குவரத்து அலுவலர் தீவிர வாகன சோதனை... விதிகளை மீறி இயக்கிய 17 வாகனங்கள் பறிமுதல்!

 
ambur

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் போலீசார் நடத்திய தீவிர வாகன சோதனையில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 15 வேன்கள் உள்பட 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாப்பனபள்ளி பகுதியில் கடந்த திங்கட்கிழமை தனியார் தொழிற்சாலை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனை அடுத்து, ஆம்பூர் பகுதியில் விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்படுகிறதா? என கண்காணிக்கும் பொருட்டு போக்குவரத்துத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து நேற்று தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

tirupattur collector

ஏடிஎஸ்பி குமார், அம்பூர் டிஎஸ்பி சரவணன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்டோர் ஆம்பூர் தேவலாபுரம், உமராபாத் ஆகிய பகுதிகளில் காலணி தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மற்றும் ஆட்டோ, சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவற்றை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது, விதிகளை மீறி இயக்கியதாக 15 வேன்கள், ஒரு பேருந்து மற்றும் ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  இதனிடையே,  திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.