சென்னிமலை துலுக்கம்பாளையத்தில் ரயில்வே குட்செட் அமைப்பதற்கு எதிராக கிராம சபா கூட்டத்தில் தீர்மானம்!

 
thulukkam

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் பனியம்பள்ளி ஊராட்சி துலுக்கம்பாளையம் பகுதியில் ரயில்வே குட்செட் அமைக்க கூடாது என கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட சென்னிமலை ஒன்றியம் பனியம்பள்ளி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பணியம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி சிவகுமார் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் பனியம்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட துளுக்கம்பாளையம் பகுதியில் ரயில்வே கூட்செட் அமைக்க கருத்துரு உள்ளதாகவும், இந்த பகுதியில் ரயில்வே குட்செட் அமைக்க கூடாதெனவும் வலியுறுத்தினார்கள். 

thulukkampalayam

மேலும், இந்த பகுதியில் ரயில்வே குட்செட் அமைந்தால் சரக்கு ரயில் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் இப்பகுதியில் இறக்கிவைக்கப்பட்டு, சரக்குகளை லாரிகளில் எடுத்துச்செல்வார்கள் லாரிகள் குடியிருப்புகள் வழியே செல்லும்போது விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும் என அச்சம் தெரிவித்தனர். இதனை அடுத்து, கிராம சபை கூட்டத்தில் ரயில்வே குட்செட் அமைக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் ரத்தினம் மணி மற்றும் அதிமுக சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் ராம்ஸ் என்கிற ராமசாமி, இளைஞரணி ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி கடல் வேந்தன், எம்ஜிஆர் மன்றம் சிதம்பரம், தொட்டம்பட்டி பூபதி, யுவராஜ் மற்றும் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.