ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்துவதாக கூறி ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.2.46 லட்சம் மோசடி... ஈரோட்டில் பரபரப்பு!

 
erode sp office erode sp office

ஈரோட்டில் ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தவதாக கூறி ரூ.2.46 லட்சத்தை மோசடி செய்த நபர்கள் குறித்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோட்டை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் குறித்த காலத்திற்குள் தனது வீட்டின் மின் கட்டணத்தை செலுத்தாததால் சகோதரரிடம் ஆன்லைனில் மின்கட்டணத்தை கட்ட சொல்லி உள்ளார். அவர் ஆன்லைனில் மின் கட்டணத்தை செலுத்திய நிலையில் சில நாட்களுக்கு பின் ஆசிரியையின் செல்போனுக்கு மின் கட்டணத்தை குறித்த நேரத்திற்குள் கட்டாததால் இன்றிரவுடன் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. தொடர்ந்து, குறுஞ்செய்தி வந்த நம்பரை ஆசிரியை தொடர்பு கொண்டு பேசியபோது, அதில் பேசிய நபர் மின்சாரத்தை துண்டிக்காமல் இருக்க தாங்கள் வாட்ஸ் அப்பில் ஒரு அப்ளிகேஷனை அனுப்புவதாகவும், அதனை மொபைலில் டவுன்லோடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.  

fraud cash

அதன்படி, ஆசிரியை அந்த அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து உள்ளே சென்றபோது அதில் கட்டணமாக ரூ.10 செலுத்த கூறியதால் அதனை கட்டியுள்ளார். அப்போது, அவரது போனுக்கு வந்த ஓடிபி நம்பரை அந்த அப்ளிகேஷனில் பகிர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 46 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. தனது வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இதுகுறித்து ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஜெயசுதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.  

இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:- பொதுமக்கள் முன் பின் முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் போனை நம்பி ஏமாற வேண்டாம். அதேபோல், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக வரும் விளம்பரங்களை நம்பியும் ஏமாற வேண்டாம். தற்போது மோசடி கும்பல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது குறித்து உங்களுக்கு யாருக்கேனும் போன் செய்து, உங்கள் செல்போன் எண்ணை 5ஜி சேவைக்கு மாற்ற வேண்டுமென உங்களை பற்றிய விவரங்களை கேட்டால் அதை நம்பி ஏமாற வேண்டாம். கடந்த சில நாட்களாக இதுபோன்ற மோசடி அதிகளவில் நடந்து வருகிறது. பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம், இவ்வாறு அவர்கள் கூறினர்.