மேலூர் அருகே கோவில் உண்டியலை கடப்பாரையால் உடைத்து பணம் கொள்ளை... சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

 
melur

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோவில் உண்டியலை கடப்பாரையால் உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபரை, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மில்கேட் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கோவில் பூசாரி நடையை சாத்திவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். நேற்று ஆயுத பூஜையையொட்டி அதிகாலை சிறப்பு பூஜைக்காக பூசாரி கோவிலை திறக்க சென்றுள்ளார். அப்போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பூசாரி உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் இருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும், மற்றொரு உண்டியலை உடைக்க முடியாததால் கொள்ளையன் தப்பிச்சென்றதும் தெரியவந்தது. 

melur

இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அளித்த தகவலின் பேரில் மேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அதிகாலையில் கோவிலுக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர், கடப்பாரையால் 2 உண்டியல்களையும் உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.