பாட்னா - எர்ணாகுளம் ரயிலில் கடத்திவந்த ரூ.2.2 கோடி போதை எண்ணெய் பறிமுதல்!

 
hasishoil

கோவை வழியாக பாட்னா -  எர்ணாகுளம் விரைவு ரயிலில் கடத்திவரப்பட்ட ரூ.2.2 கோடி மதிப்பிலான போதை எண்ணையை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிகார் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு செல்லும் விரைவு ரயிலில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, நேற்று திருப்பூர் - கோவை இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, அதில் ரயில்வே குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஒவ்வொரு பெட்டியாக சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, முன்பதிவு செய்யப்பட்ட எஸ் 10 பெட்டியின் 71-வது இருக்கையின் அடியில் சந்தேகத்திற்கு உரிய விதமாக 3 பிளாஸ்டிக் கவர்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பெட்டியில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, அது தங்களுடையது இல்லை என கூறிவிட்டனர். 

hasishoil
இதனை அடுத்து, 3 கவர்களையும் ரயில்வே போலீசார் பிரித்து சோதனையிட்டபோது, அதில் 2.2 கிலோ அளவிலான ஹேசிஸ் ஆயில்  எனப்படும் போதை எண்ணை கடத்தியது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு ரூ.2.2 கோடி ஆகும். இதனை அடுத்து, ஹேசிஸ் ஆயிலை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து, அதனை கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த சம்பவம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.