திருச்சியில் நின்றிருந்த லாரியில் ரூ.2.25 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு... 5 பேரை கைது செய்த தனிப்படை போலீசார்

 
trichy

திருச்சி அருகே லாரியில் ரூ.2.25 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிய சம்பவத்தில் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.40 லட்சம் பணம் மற்றும் 103 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள மதுபான ஆலையில் இருந்து கடந்த மாதம் 22ஆம் தேதி 975 மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு, சிவகங்கைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் ஓட்டிச்சென்றார். திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே ஓட்டுநர் செல்வம், சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு டீ கடைக்கு சென்றுள்ளார். சிறிதுநேரம் கழித்து சென்று பார்த்தபோது, லாரியில் இருந்த ரூ.2.25 லட்சம் மதிப்பிலான 725 மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம், இதுகுறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

trichy

இந்த சம்பவம் குறித்து மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், திருச்சி டிஐஜி சரவண சுந்தர், எஸ்.பி. சுஜித்குமார் மேற்பார்வையில் , டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருச்சியில் இருந்து சென்னை வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து வந்தனர்.

இந்த நிலையில், தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சிறுகனூர் அடுத்த சணமங்கலம் பகுதியில் நின்றிருந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் கும்மிடிபூண்டியை சேர்ந்த கோடீஸ்வரன், தினேஷ், கீரனூரை சேர்ந்த பழனிசாமி, அரக்கோணத்தை சேர்ந்த தங்கபாண்டி, மற்றும் மாதவரத்தை சேர்ந்த கிரி என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் 2 ஈச்சர் வாகனங்களை பயன்படுத்தி, லோடு லாரியின் முன்பக்கம் ஒரு வாகனமும், பின்புறம் மற்றொரு வாகனமும் சென்று லாரியின் மீது ஏறி தார்பாயை கிழித்து மதுபாட்டில்களை திருடியது தெரிய வந்தது. 

trichy

இதனை அடுத்து 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து மதுவிற்பனை செய்த பணம் ரூ.1.40 லட்சம் மற்றும் 103 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், மாவட்ட எஸ்.பி சுஜீத்குமார் ஆகியோர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தனர்.