தருமபுரியில் கொரோனாவால் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!
தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை ஆட்சியர் திவ்யதர்ஷினி வழங்கினார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த ஏராளமான பொதுமக்கள், தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். அதன்படி, நேற்றைய முகாமில், பேருந்து வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, பட்டா வேண்டுதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 480 மனுக்கள் பெறப்பட்டது. கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கிய ஆட்சியர் திவ்யதர்ஷினி, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தருமபுரி ஒன்றியம் முத்தல்நாயக்கன்பட்டி ஊராட்சியில் கூடுதல் துய்மை பணியாளராக பணிபுரிந்த சிவகுமார் என்பவர், பணியில் இருந்தபோது கொரோனா பாதிப்பினால் கடந்த 2021 மே 7ஆம் தேதி உயிரிழந்தார். இதனை அடுத்து, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வரப்பெற்ற ரூ.5 லட்சத்திற்கான காசோலையை, சிவகுமாரின் மனைவி வசந்தாவிடம், ஆட்சியர் திவ்யதர்ஷினி வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமுக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


