பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்... பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது!

 
bribe

திருவள்ளூர் அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற பெண் கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பண்டிகாவனூர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன். திருநின்றவூர் அருகேயுள்ள மேலகொண்டையூர் பகுதியில் இவரது தந்தை பெயரில் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் பட்டாவை, தனது பெயருக்கு மாற்றுவது தொடர்பாக வாசுதேவன், மேலகொண்டையூர் கிராம நிர்வாக அலுவலரான சர்வேஸ்வரியிடம் விண்ணப்பித்து உள்ளார். அப்போது, பட்டா மாறுதல் செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டுமென, விஏஓ சர்வேஸ்வரி கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத வாசுதேவன், இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.

thiruvallur

அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய ஆலோசனையின் படி ரசாயனம் தடவிய ரூ.5,000 பணத்தை, நேற்று மாலை காவனூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர், விஏஓ சர்வேஸ்வரியிடம் வழங்கினார். அப்போது, அலுவலகத்தில் மறைந்து இருந்த, டிஎஸ்பி கலைச்செல்வம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், விஏஓ சர்வேஸ்வரியை கையும் களவும் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.