மதுக்கரையில் உயர் ரக போதை பொருள் விற்பனை - கேரள மாநில இளைஞர் கைது

 
cbe

கோவை மதுக்கரையில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்த கேரள வாலிபரை கைதுசெய்த போலீசார், அவரிடமிருந்து 54 கிராம் மெத்தபெட்டமைன், 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உயர் ரக போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று காவல் ஆய்வாளர் வைரம் தலைமையிலான போலீசார், மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியின் அருகில் உள்ள பேக்கரியின் பின் பகுதியில் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

drug

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய விதமாக நின்று கொண்டிருந்த இளைஞரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த சபுராணி அரேனா நிகல்(23) என்பதும்,  அவர் உயர் ரக போதை பொருளான மெத்தபெட்டமைன்-ஐ விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து, அவரிடம் இருந்த 54 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் 1.5 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக   சபுராணி அரேனா நிகல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.  முன்னதாக கடந்த வாரம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.