மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிய சேலம் ஆட்சியர்!

 
slm

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன், கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 465 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டத்தில் 12 மனுக்கள் பெறப்பட்டனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க  தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

slm

மேலும், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.65 லட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.20 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகளும், கொண்டலாம்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ராஜசேகருக்கு, ஹெல்மட் விற்பனை அங்காடியை மேம்படுத்துவதற்காக ரூ.96 ஆயிரம் கடனுதவியும், குள்ளம்பட்டி சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரகாஷுக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.1 லட்சம் கடனுதவியும் என மொத்தம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கார்மேகம் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேகனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.