சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.15 கோடி வசூல்!

 
samayapuram

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.15 கோடி ரொக்கம், 2 கிலோ தங்கம் மற்றும் 3.5 கிலோ வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு, திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், அரியலூர், கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, மாரியம்மனை தரிசித்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளியால் ஆன பொருட்களையும், காணிக்கையும் செலுத்துவது வழக்கம்.

hundial

இந்த நிலையில், நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி, இணை ஆணையர் கல்யாணி முன்னிலையில் நடைபெற்றது. இதில் சமயபுரம் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். காணிக்கை எண்ணிக்கை முடிவில், ரூ.1 கோடியே 15 லட்சத்து 84 ஆயிரத்து 493  ரொக்கம் வசூலானது. மேலும், 2 கிலோ 465 கிராம் தங்கம், 3 கிலோ 545 கிராம் வெள்ளி மற்றும் 99 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைக்கப்பெற்று உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.