நரிக்குறவர் மக்கள் தரையில் அமர்ந்திருந்த விவகாரம்... சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விளக்கம்!

 
sivagangai

சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அனைவரையும் எவ்வித பாராபட்சமும் இன்றி சமஉரிமை மற்றும் உரிய மரியாதையுடன் நடத்துவதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு, தேவக்கோட்டை நல்லாங்குடி கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் சமூக மக்கள் மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது காத்திருப்பு அறையில் இருக்கைகள் காலியா இருந்தபோதும், அவர்கள் தரையில் அமர்ந்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதனால் நரிக்குறவர் சமூகத்தினர் இருக்கையில் அமர அனுமதி மறுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

sivagangai

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை  23 நபர்களுக்கு அரசு சார்பில் மாதாந்திர ஓய்வூதியத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. நரிக்குறவர் மக்களுக்கு நிலையான இருப்பிடத்தை ஏற்படுத்துவதற்காக இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேவகோட்டை நல்லாங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் வீட்டு மனை பட்டா வழங்கியது தொடர்பாக விளக்கம் கோரி மனு அளித்தனர்.

2021 டிசம்பரில் 2.5 சென்ட் வீதம் 24 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த மே மாதம் 12, 20 மற்றும் 24 ஆகிய 3 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தமிழக முதல்வரால் கடந்த 8ஆம் தேதி 91 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.நடைபெற்ற சிறப்பு முகாம்களின்போது தொழிலுக்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் வீட்டுமனை பட்டா கிடைக்காமல் விடுபட்டவர்கள், வீட்டுமனை பட்டா வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, குழுவின் தலைவர் மாணிக்கம் உடன் வருகை தந்தனர். குழுதலைவர் உள்ளிட்டோர் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்த நிலையில், மற்றவர்கள் தரை தளத்தில் காத்திருந்தனர்.

sivagangai

அவர்களை இருக்கையில் அமரக்கூடாது என்றோ, தரையில் உட்காருமாறோ யாரும் வற்புறுத்தவோ, நிர்பந்திக்கவோ அல்லது கட்டாயப்படுத்தவோ இல்லை. நரிக்குறவர் குழு தலைவர் மாணிக்கத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைவரையும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் சமஉரிமை மற்றும் உரிய மரியாதையுடன் நடத்தப்படுகின்றனர். நரிக்குறவர் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது இன்று சிறப்பு முகாம் நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேவக்கோட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, என ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.