கிருஷ்ணகிரியில் எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் பார்வையாளர் பலி!

 
dead

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடைபெற்ற எருது விடும் விழாவின்போது காளை முட்டியதில் பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இந்த போட்டியில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. போட்டியில் அவிழ்த்துவிடப்பட்ட காளைகள் ஓடுபாதையில் சீறிப்பாய்ந்து சென்றதை ஏராளமானோர் இருபுறம் திரண்டு கண்டு களித்தனர். பந்தைய தூரத்தை விரைவாக எட்டிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 

bull taming

இந்த போட்டியின்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில், காளை முட்டியதில் திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்(45) என்பவர் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.