ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா: பகல் பத்து உற்சவத்தின் 3ஆம் நாளில் சாய்வு சவுரி கொண்டை அலங்காரத்தில் காட்சியளித்த நம்பெருமாள்!

 
srirangam

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்தின் 3ஆம் நாளான இன்று சாய்வு சவுரி கொண்டை அலங்காரத்தில் அரங்கநாத சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த வியாழக்கிழமை திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. பகல் பத்து நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் உற்சவமான இன்று நம்பெருமாள் சாய்வு சவுரி கொண்டை அலங்காரத்தில் ரத்தின அபயஹஸ்தம், ரத்தினகிளி, பவள மாலை, முத்துச்சரம் மற்றும் பஞ்சாயுத மாலை உள்ளிட்ட திருவாபரணங்களை சூடியபடி எழில் மிகு கோலத்தில் காட்சி அளித்தார்.

srirangam

மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டபோது, ரங்க ராஜா.. ரங்க பிரபு.. கோவிந்தா... என பக்தர்கள் பக்தி பரவசத்தில் முழக்கமிட ராஜநடை போட்டு ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வலம் வந்த ரங்கநாதர் அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார். நம்பெருமாள் புறப்பாடுடன் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை அருளிய பன்னிரு அழ்வார்களும் வலந்து வந்து அர்ஜுன மண்டம் அடைந்தனர். நாள்தோறும் காலை 200, நாலாயிரம் திவ்ய பிரபந்த பாசுரங்களும், மாலை 200 பாசுரங்களும் வேத விண்ணப்பகர்களால் இங்கு விண்ணப்பம் செய்யப்பட்டு வருகிறது.

வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழாவை முன்னிட்டு மூலவர் முத்தங்கி சேவையில் காட்சி அளித்து வருவதால் ஸ்ரீரங்கத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.  விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை நடைபெறுகிறது.