மதிப்பெண் குறைந்ததால் கண்டித்த தாய்... விரக்தியில் உயிரை மாய்த்த பிளஸ் 2 மாணவி!

 
suicide

துறையூர் அருகே பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், அவரது தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கலிங்கமுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூக்கன். இவரது மனைவி அனுராதா. இவர்களது மகள் அனுஷயா(19). இவர் துறையூரில் உள்ள பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அனுஷயா 600-க்கு 383 மதிப்பெண்கள் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. மதிப்பெண் குறைவாக பெற்றதாக கூறி அனுஷயாவை தாய் அனுராதா கண்டித்துள்ளார். இதனால் மாணவி அனுஷயா மனமுடைந்து காணப்பட்டு உள்ளார்.இந்த நிலையில், நேற்று மாலை தாய் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த அனுஷயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

thuraiyur

சிறிது நேரத்திற்கு பின் வீட்டிற்கு திரும்பிய அனுராதா, மகள் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும், வேதனையில் அவர் வீட்டிலிருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்த துறையூர் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.