கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்தை ஆய்வுசெய்த ஆட்சியர்!

 
kollidam river

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்தை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் அணை நிரம்பியது. இந்த நிலையில், நேற்று அணையில் இருந்து வினாடிக்கு 1.95 லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நீலத்தநல்லுர் கொள்ளிடம் ஆற்று பகுதியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நீர் வரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நீர்வளத்துறை காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் ஐயம்பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

thanjavur

ஆய்விற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம்  ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையை, இலவச அழைப்பு எண் 1077 மற்றும் 04362 264114, 04362 264115 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறினார்.

தொடர்ந்து, கொத்தங்குடி ஊராட்சி குடிதாங்கி பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்திய ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், பின்னர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள நிவாரண முகாமை ஆய்வு செய்தார், இந்த ஆய்வின்போது கும்பகோணம் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.