மூளை வளர்ச்சி குன்றிய சிறுவனை பாதிவழியில் இறக்கிவிட்ட விவகாரம்; அரசுப்பேருந்து ஒட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்!

 
krishnagiri

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப்பேருந்தில் வந்த மூளை வளர்ச்சி குன்றிய சிறுவனை, நீண்ட தொலைவிற்கு சென்று இறக்கிவிட்ட விவகாரத்தில் பேருந்து ஒட்டுநர், நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள பேகேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(55). ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த திங்கட்கிழமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீக்கும் நாள் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக, ஓசூரில் இருந்து மனைவி மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய மகன் ஹரிபிரசாத்(16) ஆகியோர் உடன் அரசுப் பேருந்தில் கிருஷ்ணகிரிக்கு சென்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்றபோது கோபாலகிருஷ்ணன், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தும்படி கேட்டுள்ளார்.

suspend

ஆனால் நடத்துனர் மேம்பாலத்தில் செல்வதால் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்த முடியாது என கூறி 2 கிலோ மீட்டர் தொலைவில் சென்று கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினரை இறக்கிவிட்டார். இதனால் கோபாலகிருஷ்ணன் மாற்றுத்திறனாளி மகனை கையில் சுமந்தபடி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், சம்பந்தப்பட்ட அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், கோபாலகிருஷ்ணன் குடும்பத்தினரை நீண்ட தொலைவில் இறக்கிவிட்ட அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து, போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.