ஆம்பூரில் தனியார் வங்கி முன் நின்ற பைக் திருட்டு... சிசிடிவி காட்சி அடிப்படையில் கொள்ளையனுக்கு போலீஸ் வலை!

 
ambur

ஆம்பூரில் தனியார் வங்கி முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை, மர்மநபர் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பாரதம்பட்டறை பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவி. இவர் புறவழிச்சாலை பகுதியில் இயங்கி வரும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நாள்தோறும் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி, வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற சஞ்சீவி, வங்கியின் வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.

ambur

சிறிது நேரத்துக்கு பின் வெளியே வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் மாயமாகி உள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சீவி,  அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தார். அப்போது, கைலி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர், அவரது இருசக்கர வாகனத்தை லாவகமாக திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதுகுறித்து சஞ்சீவி, ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் கடந்த ஒரு வாரததில் மட்டும் 4 இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.