ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

 
theni

தேனி - அல்லிநகரம் நகராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதியில் திடீர் ஆய்வுமேற்கொண்ட ஆட்சியர் முரளிதரன், அங்குள்ள மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தேனி - அல்லிநகரம் நகராட்சி பகுதியில் ஆதி திராவிடர் அரசு மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, விடுதி மாணவர் வருகை பதிவேடு, சமையல் அறை, குளியல் அறை, கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து, விடுதி ஊழியர்களிடம் பேசிய ஆட்சியர் முரளிதரன், மாணவர்கள் தங்கும் அறையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், விடுதி வளாகத்தை சுத்தமாக பராமரித்திடவும், குளியல் அறை மற்றும் கழிப்பறை பகுதிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் கண்காணித்திட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

theni

தொடர்ந்து, விடுதி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, விடுதி மாணவர்களின் பொழுதுபோக்கிற்காக விளையாட்டு வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று, ஆட்சியர் விளையாட்டு வசதியினை ஏற்படுத்தி தருவதாக மாணவர்களிடம் உறுதியளித்தார். மேலும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.