திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

 
thiruvannamalai

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, நாள்தோறும் காலை மாலை வேளைகளில் சுவாமி மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Thiruvannamalai

இந்த நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ஆம் நாளான நேற்று  பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி, விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர்  ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட தனித்தனி  தேர்களில் எழுந்தருளினர். 

முதலில் காலை 7 மணி அளவில்  விநாயகர் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது. இதனை தொடர்ந்து  10 மணி அளவில் ஸ்ரீவள்ளி தெய்வாதைன சமேத முருக பெருமான் தோரோட்டம் நிக்ழச்சி நடைபெற்றது. தொடர்ந்து, பிற்பகல் 3.40 மணி அளவில் பெரிய தேர் என அழைக்கப்படும் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதனை சட்டபேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், கோவில் இணை ஆணையர் அசோக்குமார் உள்ளிட்டோர் வடம் பிடித்து இழுத்து தோரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

thiruvannamalai

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலைக்கு அரோகரா என கோஷமிட்டபடி பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து அண்ணாமலையாரை வழிபட்டனர். பெரிய தேர் இரவு 10 மணி அளவில் நிலையை வந்தடைந்த நிலையில், ஸ்ரீபராசக்தியம்மன் தேரை பள்ளி கல்லுரி மாணவிகள், பெண்கள் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். இறுதியாக சண்டிகேஸ்ரர் தேரை சிறுவர், சிறுமியரகள் பக்தி பரவசத்துடன் இழுத்து வழிபட்டனர். 

தோரோட்டத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில், வேலுர் சரக டிஐஜி சத்தியபிரியா, திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.