இயக்குநர் லீனா மணிமேகலைக்கு மிரட்டல்... கோவையை சேர்ந்த இந்து அமைப்பு பெண் நிர்வாகி கைது!

 
leena

இயக்குநர் லீனா மணிமேகலைக்கு மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட  கோவையை சேர்ந்த இந்து அமைப்பு நிர்வாகி சரஸ்வதியை போலிசார் கைது செய்தனர்.

திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள காளி என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் காளி புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புக்களை சேர்ந்தவர்களும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வந்தனர். அத்துடன், இயக்குநர் லீனா மணிமேகலை எதிராக காவல் நிலையங்களிலும் புகார் அளித்து வருகின்றனர்.

leena manimegalai

இந்த நிலையில் கோவை சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவி அதிரடி சரஸ்வதி என்பவர், காளியின் படத்தை அவமதிக்கும் விதமாக வெளியிட்டதாக லீனா மணிமேகலையை கண்டித்து  வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த விடியோவில் இயக்குநர் லீனா மணிமேகலையை அவதூறாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் அவர் பேசி இருந்தார். இந்த வீடியோக காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், இந்த வீடியோ விவகாரம் குறித்து செல்வபுரம் போலீசார் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அதன் பேரில், சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் தலைவி சரஸ்வதி மீது இயக்குனர் லீனா மணிமேகலை குறித்து தகாத வார்த்தைகள் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, இன்று காலை போலீசார் சரஸ்வதியை கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.