திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

 
thiruvattar

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418ஆண்டுகளுக்கு பின் இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ தலங்களில் ஒன்றான இக்கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி, கடந்த 29ஆம் தேதி கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. தொடர்ந்து நேற்றைய தினம் கோவில் கொடி மரத்தில் தங்கக்கவசம் சாத்தப்பட்டு, கோபுரத்தில் தங்கக் கலசங்கள் பொருத்தப்பட்டன.

thiruvattar

தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவையொட்டி, இன்று அதிகாலை கணபதி ஹோமம், அபிஷேகம் ஸ்ரீமத் பாகவத பாராயணம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து, காலை 6.26 மணிக்கு ஆதிகேசவ பெருமாள் கோவில் கோபுர உச்சி கும்ப கலசத்தில் நம்பூதிரிகள் புனிதநீரை ஊற்றினர். அதேபோல் கோவிலில் உள்ள மற்ற இரு கோபுரங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டபடி ஆதிகேசவ பெருமாளை வழிபட்டனர். 

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  சேகர் பாபு, தகவல் தொழில்நுட்ப  துறை அமைச்சர் மனோ தங்கராஜ், காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் அரவிந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.