குளத்தில் மாட்டை குளிப்பாட்டியபோது சோகம்... தம்பிகள் கண் முன்னே நீரில் மூழ்கி அண்ணன் பலி!

 
drowned drowned

திருச்சி அருகே குளத்தில் நீச்சல் அடித்தபோது தண்ணீரில் மூழ்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துவாக்குடி அடுத்துள்ள திருநெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விஷ்வா(17) உள்ளிட்ட 3 மகன்கள் உள்ளனர். விஷ்வா, 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லுரியில் சேர இருந்தார். இந்த நிலையில், நேற்று விஷ்வா மற்றும் அவரது தம்பிகள் இருவரும் நெடுங்குளம் பகுதியில் உள்ள தீர்த்தகுளத்திற்கு மாடுகளை குளிப்பாட்ட சென்றுள்ளனர். அப்போது, குளத்தில் நீந்திக் கொண்டிருந்த விஷ்வா திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தம்பிகள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று குளத்தில் இறங்கி தேடினர்.

drowned

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு தீயணைப்புத்துறையினர் மற்றும் துவாக்குடி போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, விஷ்வா உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தம்பிகளின் கண் முன்னே அண்ணன் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.