விழுப்புரத்தில் இருவேறு இடங்களில் குட்கா பதுக்கிய இருவர் கைது; ரூ.2 லட்சம் குட்கா, 94 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்!

 
villupuram

விழுப்புரத்தில் இருவேறு இடங்களில் குட்கா பொருட்களை பதுக்கிவைத்திருந்த 2 நபர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா, ரூ.94,000 ரொக்கம் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நேற்று டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் விழுப்புரம் மேற்கு காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து சோதனையிட்டனர். அப்போது, அவரது வாகனத்தில் குட்கா புகையிலை பொருட்கள் கடத்திச்சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

villupuram

அதில் அவர் விழுப்புரம் சாலமேடு பகுதியை சேர்ந்த அபிப் ரகுமான்(61) என்பதும், விற்பனைக்காக குட்காவை கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, அவரது வீட்டில் 14 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த பல ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள், ரூ.94,000 பணம் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அபிப்ரகுமான் மீது விழுப்பும் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.  

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் காணை பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்திய நபரை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து ஏராளமான குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இரு வழக்குகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவை விழுப்புரம் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீநாதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.