கோவை அருகே அவுட்டுகாய் வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடிய இருவர் கைது!

 
hunting

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆதிமாதையனூர் பகுதியில் அவுட்டு காய் வைத்து காட்டுபான்றியை வேட்டையாடிய 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் கடந்த வாரம் அவுட்டுகாய் கடித்து பெண் யானை ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து, வன எல்லைகளில் அவுட்டு காய் போன்ற நாட்டு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளதா? என வனத்துறையினர் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளியங்காடு சுற்றுக்கு உள்பட்ட ஆதிமாதையனூர், கருப்பராயன் கோவில் அருகே உள்ள பள்ளத்தில் வன ஊழியர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். 

arrest

அப்போது, அங்கு 3 பேர் காட்டுப்பன்றியை வெட்டி கூறு போட்டுக் கொண்டிருந்தனர். வனத்துறையினர் வருவதை கண்டதும் அங்கிருந்த ஒருவர் தப்பியோடிய நிலையில், மற்ற இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது, அவர்கள் கவின்குமார், சின்னசாமி என்பதும், தப்பியோடிய நபர் கிட்டான் என்பதும் தெரிய வந்தது. மேலும், வன எல்லைக்கு வந்த காட்டுப்பன்றியை அவுட்டுக்காய் எனப்படும் நாட்டுவெடி குண்டை வைத்து, வேட்டையாடியதும், பின்னர் அதனை பங்கிட்டு கொண்டபோது வனத்துறையினரிடம் சிக்கியதும் தெரிய வந்தது. 

இதனை அடுத்து, பிடிபட்ட கவின்குமார், சின்னசாமி ஆகியோர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 9 மற்றும்51(1) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, இருவரையும் நிதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.