இலங்கைக்கு கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு, பச்சை கிளிகள் பறிமுதல் - இருவர் கைது!

 
rmd

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற மண்ணுளி பாம்பு, பச்சைக்கிளிகள் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

ராமநாதபுரத்தில் மண்ணுளி பாம்புடன் இருவர் சுற்றித்திரிவதாக நேற்று வன உதவி பாதுகாவலர் கணேச லிங்கத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், வனவர் சடையாண்டி, வனக்காப்பாளர்கள் டேனியல், சுதாகர், பவுல் உள்ளிட்ட வனத் துறையினர் ராமநாதபுரம் நகரில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கு உரிய வகையில் நின்றிருந்த 2 பேரை, வனத்துறையினர் பிடித்து சோதனையிட்டனர்.

ramanathapuram

அப்போது அவர்கள் வைத்திருந்த வாளியில் அரிய வகையிலான மண்ணுளி பாம்பு மற்றும் 6 பச்சைக் கிளிகள் இருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக 2 பேரையும் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஏரலை சேர்ந்த ராபர்ட்  சர்ஜி, முத்து தங்கம் என தெரிய வந்தது. இவர்கள் தூத்துக்குடியில் இருந்து மண்ணுளி பாம்பு, கிளி ஆகியவற்றை ரயில் மூலம் ராமநாதபுரத்துக்கு கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

பின்னர், அவற்றை ராமேஸ்வரத்துக்கு ரயிலில் கடத்திச்சென்று, அங்கிருந்து இலங்கை வழியாக சீனாவுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, ராபர் சர்ஜி, முத்து தங்கம் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்து மண்ணுளி பாம்பு, 6 பச்சை கிளிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.