கோவையில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகளை திருடிய இருவர் கைது... 18 பவுன் நகை, இருசக்கர வாகனம் பறிமுதல்!

 
cbe

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் மூதாட்டியை கட்டிப்போட்டு நகைகளை திருடிய 2 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து 18 பவுன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயி. இவரது மனைவி சுப்பாத்தாள். கடந்த 7ஆம் தேதி சுப்பிரமணி மாடு மேய்க்க சென்றிருந்த நிலையில், சுப்பாத்தாள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அவரது வீட்டிற்கு முகவரி கேட்பதுபோல வந்த 2 மர்ம நபர்கள், அவரது கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு,  வீட்டில் இருந்த 9 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் குறித்து சுப்பாத்தாள் அளித்த புகாரின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். 

arrested

இந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன், டிஎஸ்பி நமச்சிவாயம் மேற்பார்வையில் பெரியநாயக்கன்பாளையம் ஆய்வாளர் தமோதரன் தலைமையில்  உதவி ஆய்வாளர்கள் ஜெயபிரகாஷ், எஸ்எஸ்ஐ சசிகுமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார், குற்றவாளிகளை பிடிக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கொள்ளை நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் கோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த  செல்வராஜ்(39), திருவாரூரை சேர்ந்த பிரபாகரன்(34) ஆகியோர் மூதாட்டியிடம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதனை அடுத்து, தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, 6 சம்பவங்களில் தொடர்புடைய 18 பவுன் தங்க நகைகற் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொள்ளை நடைபெற்ற 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்து, நகைகளை மீட்ட தனிப்படை போலீசாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.