கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி இருவர் படுகாயம்!

 
kodaikanal kodaikanal

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியல் இருவர் பலத்த காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் உணவு மற்றும் குடிநீர் தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வரும் நிகழ்வு அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், நேற்று கொடைக்கானல் ஏழுவழிச் சாலை பகுதியில் உலாவிய காட்டெருமை ஒன்று திடீரென, அங்கு நின்றிருந்தவர்கள் நோக்கி ஓடியது. இதனை கண்ட அவர்கள் ஓட்டம் பிடிக்கவே அந்த மாடு துரத்திச்சென்று முட்டியது. இதில் பாஸ்கர்(48) மற்றும் கைலாஷ் ஆகியோர் காயமடைந்தனர். அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு பாஸ்கரை தனியார் மருத்துவமனையிலும், கைலாஷை கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

bison

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்டினர். வன விலங்குகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்களை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என  கொடைக்கானல் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில், இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.