தூத்துக்குடியில் 2 இருசக்கர வாகனங்கள் மீது லாரி மோதல் - இருவர் பலி!

 
accident accident

தூத்துக்குடியில் 2 இருசக்கர வாகனங்களின் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் காற்றாலை நிறுவன ஊழியர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி கடற்கரை சாலையில் நேற்றிரவு சாலையில் சென்று கொண்டிருந்த லாரி ஓன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒடியது. அப்போது, சாலையில் எதிரே வந்த 2  இருசக்கர வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற திருச்செந்தூர் அடுத்த வீரபாண்டியன் பட்டினத்தை சேர்ந்த அந்தோணி ஸ்டீபன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

tuticorin

மேலும், தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த தனியார் காற்றாலை நிறுவன ஊழியர் செல்வகுமார் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு வந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார், காயமடைந்த செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து, உயிரிழந்த இருவரது உடல்களையும் தென்பாகம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் மீது லாரி இருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.