சிவகங்கை அருகே ஊருணியில் மூழ்கி சிறுவன் உள்பட இருவர் பலி!
சிவகங்கை அருகே ஊருணியில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற இளைஞரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம் வி.புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது 4 வயது மகன் குணா. நேற்று மாலை சிறுவன் கிராமத்தில் உள்ள ஊருணி அருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது ஊருணியில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் மூழ்கினார். இதனை கண்ட அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் அய்யன்காளை என்பவர் ஊருணியில் இறங்கி காப்பாற்ற முயன்றார். அப்போது நீச்சல் தெரியாததால் அவரும் நீரில் மூழ்கினார்.

இது குறித்து கிராமத்தினர் அளித்த தகவலின் பேரில் சிவகங்கை தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிறுவன் குணா, அய்யன்காளை ஆகியோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து, போலீசார் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளத்தில் மூழ்கி சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


