நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!

 
Tasmac

விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, பிப்.17 முதல் பிப். 19  மற்றும் பிப்.22 ஆகிய நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 2022 நடைபெறும் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 (எப்.எல்.6 தவிர) வரையிலான மதுபான உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மதுபானம் விற்பனை செய்யப்படாமல் மூடப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

virudhunagar

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி வாக்குப்பதிவு நாளான 19.02.2022 அன்று நடைபெறுவதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 17.02.2022 காலை 10 மணி முதல் 19.02.2022 நள்ளிரவு 12 மணி வரை நகர்ப்புற உள்ளாட்சி நடைபெறும் பகுதிகள் மற்றும் சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.

tasmac bar

மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான 22.02.2022 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியினை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.