நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!

 
dharmapuri

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி, 10 பேரூராட்சிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் திவ்யதர்ஷினி நேற்று ஒதுக்கீடு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று நடைபெற்றது. தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, தேர்தல் பார்வையாளர் / தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் , தேர்தல் நடைபெறும் தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் உள்ள 230 வாக்குச்சாவடிகளில் பாலக்கோடு பேரூராட்சியில் 2 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியதால், அந்த 2 வாக்குச்சாவடி நீங்கலாக 228 வாக்குச்சாவடிகளுக்கு ரிசர்வ் ஒதுக்கீடு 47 சேர்த்து மொத்தம் 275 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில் தருமபுரி நகராட்சிக்கு 69 வாக்குப்பதிவு இயந்திரங்களும்,  பேரூராட்சிகளில் அரூர் 36, பாலக்கோடு, பென்னாகரம் தலா 22 , பி.மல்லாபுரம், கடத்தூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாப்பாரப்பட்டி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டிக்கு தலா 18 வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

voting machine

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு பெறப்பட்ட நகர்ப்புற அமைப்பை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அதனை காவல்துறை பாதுகாப்புடன் தங்களது அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று தொடர்ந்து கண்காணிக்க போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, 3ஆம் கட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி, மாநில தேர்தல் ஆணைய உத்தரவின்படி நாளை தருமபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள்(அ) பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு, அதனை தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டுகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு  முதலாவது பயிற்சி கடந்த ஜனவரி 31ஆம் தேதி அன்று வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று நடைபெறுவதாக இருந்த 2ஆம் கட்ட பயிற்சியானது மாநில தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் பேரில் நாளை நடைபெற உள்ளது.